குழந்தை வளர்ச்சி பற்றிய எனது புரிதலின் மேம்பாடு

குழந்தை வளர்ச்சி பற்றிய எனது புரிதலின் மேம்பாடு

Spread the love

குழந்தை வளர்ப்பில் இவ்வளவு சிறப்புகளும் முக்கியமான விஷயங்களும் உள்ளன என்பதை நான் உணர்ந்தது பால மந்திர் வந்த பிறகுதான். குழந்தை பேணுதலை விளையாட்டாகக் கற்றுக்கொள்ள வந்த நான், “விளையாட்டின் மூலம் கற்றல்” என்ற புத்தகத்தின் மூலம் அதை மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டேன். குழந்தை வளர்ப்பு என்பது பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பு என்ற எண்ணம் பலரிடத்தில் இருக்கும் நிலையில், ஆண்களுக்கும் அதில் சம பங்கு உண்டு என்ற மனப்பான்மையை நான் உறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

“காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பார்கள். ஆனால் எங்கள் கிராமங்களில் உள்ள சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவும், அக்கறையுடன் வளர்க்கவும் தவறி விட்டதைப் பார்க்க முடிகிறது. அறியாமை மற்றும் சூழ்நிலை காரணங்களால் சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை திறன் வாய்ந்தவர்களாக வளர்க்க தேவையான தூண்டுதலை வழங்க இயலவில்லை என்று கூறுகிறார்கள். மற்றொரு பக்கம், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து, திட்டமிட்டு செயல்படும் சமூகங்களும் உள்ளன.

இந்த நிலையை மாற்றும் நோக்கில் BMRRC மேற்கொண்ட முயற்சியின் மூலம், கும்முடிபூண்டி மற்றும் எல்லாபுரம் பகுதிகளில் 5 கிராமங்களில் தொடங்கிய பணிகள், இன்று 134 கிராமங்களுக்கு விரிந்துள்ளன. ஆரம்பகால கல்வியின் முக்கியத்துவம், குழந்தையின் மூளை வளர்ச்சியின் அவசியம், தூண்டுதலின் பங்கு, குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் திறன்கள் மற்றும் பொறுப்பு, ஆகியவற்றுடன் விளையாட்டு குழந்தைகளுக்கு எவ்வளவு அவசியம் என்பதனை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்துள்ளோம். இதன் விளைவாக, பெற்றோர்களிடையே ஒரு நேர்மறையான மாற்றத்தை காண்கிறோம்.

இவ்வாறான சூழ்நிலையில், எங்கள் களப்பணியாளர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளைப் போலவே மற்ற குழந்தைகளையும் அக்கறையுடன் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டு செயல்படுகின்றனர். ஒவ்வொரு செயல்பாட்டிலும் குழந்தைகளுக்கு தேவையான தூண்டுதலை வழங்கி, அவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள்.

குழந்தைகளிடத்தில் இயல்பாகவே சாதி, மதம், நிறம், பொறாமை போன்ற வேறுபாடுகள் இல்லை. இவை அனைத்தையும் அவர்கள் பெற்றோர்களிடமிருந்தும் சமூகத்திலிருந்தும் கற்றுக் கொள்கிறார்கள். எனவே, பெற்றோர்கள்தான் குழந்தைகளின் முதல் மற்றும் சிறந்த Role Model. முதலில் சமூகத்தின் மற்றும் பெற்றோரின் மனநிலையை மாற்றினால், குழந்தைகளின் மாற்றம் தானாகவே ஏற்படும்.

இந்தத் திட்டத்தில் பணியாற்றுவது எனக்கு மிகுந்த பெருமையை அளிப்பதுடன், என் குழந்தைகளை திறன் வாய்ந்தவர்களாக வளர்ப்பதற்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது.

Excerpt of the above article in English :

My experience with Bala Mandir deepened my understanding of child development, especially through Learning Through play and shared responsibility between parents. Through BMRRC’s efforts, an initiative that began in five villages has now reached 134, raising awareness about early education, brain development, and the importance of stimulation. Many parents, once limited by lack of awareness or time, are now adopting positive practices. Field workers play a crucial role, nurturing every child with care and dedication. By transforming parental mindsets and recognizing their role as primary role models, we can ensure children grow into capable, confident, and compassionate individuals.

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


BALAMANDIR BLOG